வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டம்
வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடந்தது. அப்போது மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடந்தது. அப்போது மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எருது விடும் விழாவுக்கு தடை
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மாடு விடும் திருவிழா நடத்துவது வழக்கமாகும். இந்தாண்டு கொரோனா வேகமாக பரவி வருவதால் மாடு விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்து முன்னணி மற்றும் எருது விடும் திருவிழா பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர். மேலும் அவர்கள் போராட்டம் செய்யப்போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், செந்தில்குமார், நந்தகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்களை விசாரித்து பின்னர் உள்ளே அனுப்பினர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அங்கு வந்து பார்வையிட்டு சென்றார்.
போராட்டம்
காலை 10 மணி அளவில் இந்துமுன்னணி மற்றும் எருதுவிடும் விழாக்குழுவினர் வரத்தொடங்கினர். சிலர் கிரீன்சர்க்கிள் பகுதியில் மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், ராஜேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர். அதில், வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த 180 கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். காளைகளுக்கும் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கொரோனாவை காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்புடையதாக இல்லை. விழாக்குழுவினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை அமைத்து அதன் நடுவே காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். இதனால் நோய்பரவல் இருக்காது என்று நம்புகிறோம். கட்டுப்பாடுகளுடன் விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கலெக்டர் கூறுகையில், தொற்று குறைந்தால் இதுகுறித்து பரிசீலனை செய்யலாம் என்றார்.
Related Tags :
Next Story