கரூரில் போலீசார் வாகன சோதனை
கரூரில் இரவு நேர ஊரடங்கையொட்டி போலீசார் தடுப்பு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர்,
வெறிச்சோடிய ஜவகர்பஜார்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் நேற்றுமுன்தினம் முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு, சர்ச் கார்னர், மேற்கு பிரதட்சணம் சாலை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு அடைத்தனர். இதனால் ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. தியேட்டர்களில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
போலீசார் வாகன சோதனை
கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன சோதனை மேற்கொண்டனர். இரவு 10 மணிக்கு மேல் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி விசாரித்து அனுப்பினர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தி முக கவசம் அணியாத பயணிகளை முக கவசம் அணிய சொல்லி அறிவுறுத்தினர். மேலும் கண்டக்டரிடம் முக கவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்ற வேண்டாம் எனவும் கூறினர்.
இதேபோல் லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், சர்ச் கார்னர், சுங்ககேட் உள்ளிட்ட நகரின் 18-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வாகன சோதனையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் கரூர் தாசில்தார் மோகன்ராஜ் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் நேற்று இரவும் கரூர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story