பக்தர்கள் தரிசனத்துக்கு தடையால் கோவில்கள் வெறிச்சோடின
கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து உள்ளது. இதனால் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து உள்ளது. இதனால் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவிலின் நான்கு வாசல் பகுதியிலும் தடுப்பு கம்பிகளை அமைத்து பக்தர்கள் உள்ளே செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தடை காரணமாக கோவிலின் சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களும், தீர்த்த கிணறுகள் பகுதியும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
வழக்கம் போல பூஜைகள்
பக்தர்கள் தரிசனம் செய்ய தடை என்பது குறித்து அரசால் இரண்டு நாட்களுக்கு முன்பே முறையாக அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையிலும் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் ராமேசுவரம் கோவிலில் சாமிக்கு தினமும் நடைபெறும் ஆறுகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன.
திருப்புல்லாணி கோவில்
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில், திருஉத்திரகோசமங்கை மங்கள நாதர் கோவில், தேவிப்பட்டினம் நவபாஷாணம், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில், ஏர்வாடி தர்கா, ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்குள்ளும் பக்தர்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுபோல் இன்றும், நாளையும் வழிபாட்டுத்தலங்களில்பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story