ரூ.20 லட்சம் நில மோசடி; பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
பரமக்குடி அருகே ரூ.20 லட்சம் நில மோசடியில் பெண் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் போலீஸ் லைன் சந்து பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி செல்வராணி (வயது 43). இவரது தாத்தா வேலுத்தேவர் என்பவருக்கு சொந்தமான 1,140 சதுர அடி நிலத்தினை தனக்கு எழுதிக்கொடுத்ததன் அடிப்படையில் செல்வராணி பட்டா மாற்றாமல் தாத்தாவின் பட்டா அடிப்படையில் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இந்த நிலத்தினை ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மொசுக்குடி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் ராஜகோபால், அவரது மனைவி கனகவள்ளி, அருங்குளம் கிராமத்தை சேர்ந்த சமையன் மகன் கணேசன் ஆகியோர் வேலுத்தேவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து இனாம் செட்டில்மென்ட் கொடுத்தது போல ஆவணங்கள் தயார் செய்து தங்களுக்குள் விற்பனை செய்து அபகரித்து கொண்டனர்.
இதற்கு அபிராமத்தை சேர்ந்த ராமன் மகன் சத்தியராஜ் என்பவர் சாட்சி கையெழுத்திட்டாராம். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த செல்வராணி தனது நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது குறித்து மாவட்ட காவல்துறையில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குபதிவு செய்து ராஜகோபால், அவரது மனைவி கனகவள்ளி, கணேசன், சத்தியராஜ் ஆகியோரை தேடிவருகின்றார்.
Related Tags :
Next Story