தஞ்சையில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தஞ்சையில் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தஞ்சையில் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்பட்டன.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைநேரம் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் இரவு நேர ஊரடங்கு நேற்றுமுன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள்
மேலும் விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அதிகஅளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதன்காரணமாக தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயிலான மராட்டா கோபுர நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. மேலும் இரும்பினால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டு பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதேநேரம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற்றன.
கோபுர தரிசனம்
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் கோவிலுக்கு வந்தனர். ஆனால் உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், கோவிலுக்கு வெளியே நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இதேபோல் தஞ்சை மேலவீதி சங்கரநாராயணன் கோவில், மூலைஅனுமார் கோவில், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இந்து கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
நெய்தீபங்கள்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி நெய்தீபங்களையும் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் பள்ளிவாசல்கள், மசூதிகளில் தொழுகை நடைபெறும். முஸ்லிம்கள் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபடுவார்கள். தடை காரணமாக நேற்று மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையை நடத்தினர்.
தஞ்சை காந்திஜிசாலை இர்வீன்பாலம் அருகே உள்ள பள்ளிவாசலின் நுழைவு வாயில் மூடப்பட்டதுடன், தமிழகஅரசின் உத்தரவுப்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் தொழுகை கிடையாது என்று எழுதப்பட்டிருந்த பேனர் கட்டப்பட்டிருந்தது.
இணையவழியில் ஆராதனை
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்றுமாலை 6.30 மணிக்கு திறப்பின் வாசல் என்ற ஜெபக்கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஆனால் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த ஜெபக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக இணையவழியில் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது.இதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறக்கூடிய ஆராதனையும் ரத்து செய்யப்பட்டு இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு பதிலாக வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி ஆராதனை நடத்தப்பட உள்ளது.இதேபோல் தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள இருதய ஆண்டவர் பேராலயம் மூடப்பட்டதுடன் தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பேராலயத்தில் வழிபாடு நடைபெறாது. எனவே இந்த நாட்களில் பேராலயத்திற்கு வருவதை தவிர்க்கவும் என எழுதப்பட்டுள்ளது.
தஞ்சை மானம்புச்சாவடி சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை ஏசு கோவில், சின்னையா பாளையம் தெரு நல்ல மேய்ப்பன் ருத்ரன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story