வழிபாட்டு தலங்கள் மூடல்


வழிபாட்டு தலங்கள் மூடல்
x
தினத்தந்தி 8 Jan 2022 2:02 AM IST (Updated: 8 Jan 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

அரியலூர்:

வழிபாட்டு தலங்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கையும் அறிவித்து, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதன்படி கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
மேலும் அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகளில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
அதன்படி அரியலூர் மாவட்டத்திலும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தன. இதில் அரியலூர் நகரில் உள்ள பெருமாள், சிவன், முருகன், மாரியம்மன், விநாயகர் கோவில்கள் மற்றும் பள்ளிவாசல், தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தன. மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று கோவில் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று வழிபட்டனர். கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டபோதும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணியவில்லை. பஸ்களிலும் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பயணிகளும் முக கவசம் அணியவில்லை.
வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபடவில்லை. இதனால் அரியலூர் நகர பகுதி இயல்பான நிலையிலேயே உள்ளது. அரியலூரை சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பலர் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வருவது வழக்கம். சென்னையில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருவதால் அங்கிருந்து வருபவர்களால் மாவட்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
ஏமாற்றம்
தாமரைகுளம் பகுதியிலும் கோவில்கள் மூடப்பட்டிருந்தன. இதனையறியாமல் மார்கழி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களை வழிபாட்டு தலங்களில் அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், கோதண்டராசாமி கோவில் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டிருந்தபோதும் பூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற்றன.
மீன்சுருட்டிைய அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவிலும் நேற்று மூடப்பட்டிருந்தது. 
இதனால் நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வராததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story