தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
மின்கம்பங்களால் இடையூறு
சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் முதல் வடுகப்பட்டி செல்லும் சாலை வரை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் ஏற்கனவே பழைய இடத்தில் இருந்த மின்கம்பங்கள் அதே இடத்தில் இருப்பதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இரவு நேரத்தில் மின்கம்பங்கள் இருப்பதே தெரிவதில்லை. எனவே விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கந்தசாமிபாளையம்.
சாலையை ஆக்கிரமிக்கும் செடிகள்(படம்)
அந்தியூரை அடுத்த ஓசைப்பட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் வரும் போது ஒன்றுக்கொன்று விலகி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் விலகி செல்லும்போது அதில் பயணிப்பவர்களின் மீது செடிகள் பட்டு உடலில் சிராய்ப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து காணப்படும் செடிகள் மற்றும் புதர்களை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், வெள்ளாளபாளையம்.
தேங்கும் கழிவுநீர்
நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் புதுக்காலனி செரங்காடு பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அந்த பகுதியை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ரங்கநாதபுரம் புதுக்காலனி.
சாயும் நிலையில் மின் கம்பம்
ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு மின் கம்பம் சாயும் நிலையில் காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின் கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
சாக்கடை வடிகால் வேண்டும்
மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் விவேகானந்தர் 1-வது வீதி மற்றும் 2-வது வீதியில் சாக்கடை வடிகால் இல்லை. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் ஒரு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், 46 புதூர்.
ரோட்டில் திடீர் பள்ளம்
ஈரோடு நேதாஜி நகர் மாணிக்கம்பாளையம் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை மற்றும் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ரோடு சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பள்ளத்தில் கற்களை போட்டும், கம்பம் நட்டு அதில் சிவப்பு கலரில் துணி கட்டியும் வைத்துள்ளனர். எனவே ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணதனிஷா, ஈரோடு.
தடுப்புகள் வைக்க வேண்டும்
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் அதிவிரைவாக இயக்கப்படுகிறது. இதனால் காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. ஈரோட்டில் இருந்து பவானி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போதும் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன. தொடர் விபத்து ஏற்படாத வகையில் காலிங்கராயன்பாளையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஈரோடு செல்லும் வழியிலும், ஈரோட்டில் இருந்து பவானி நோக்கி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் இடத்திலும் தடுப்புகள் வைக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.
Related Tags :
Next Story