பெருந்துறையில் 3 வீடுகளில் கைவரிசை 12 பவுன் நகை-ஸ்கூட்டர் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பெருந்துறையில் 3 வீடுகளில் 12 பவுன் நகை-ஸ்கூட்டர் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை
பெருந்துறையில் 3 வீடுகளில் 12 பவுன் நகை-ஸ்கூட்டர் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 பவுன் நகை
பெருந்துறை சென்னிமலை ரோடு உழவன் நகரைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 41). இவர் பெருந்துறையில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் எடையுள்ள தங்க சங்கிலி, வளையல் மற்றும் 8 வெள்ளி தட்டுகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி குமரவேல் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
3 பவுன்-ஸ்கூட்டர்
இந்த சம்பவம் நடந்த அதேநாள் இரவு பெருந்துறை பவானி ரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிப்காட் தொழிலாளி பெரியசாமி (35) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து 3 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
மேலும் பெரியசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிரிதர் என்பவரின் மனைவி சரண்யா என்பவருடைய ஸ்கூட்டரையும் யாரோ திருடிச்சென்றுவிட்டார்கள். இதுகுறித்து பெரியசாமி, சரண்யா ஆகியோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வீடுகளிலும் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story