வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களுக்கு தடை: கோவில்களில் நடை சாத்தப்பட்டன


வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களுக்கு தடை: கோவில்களில் நடை சாத்தப்பட்டன
x
தினத்தந்தி 8 Jan 2022 2:27 AM IST (Updated: 8 Jan 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்பட்டன.

ஈரோடு
வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்பட்டன. 
கோவில் நடைகள் அடைப்பு
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவோடு தற்போது ஒமைக்ரான் பரவலும் ைககோர்த்து கொண்டதால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பல வித கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தை  பொருத்தவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த 3 நாட்களும் கோவில் நடைகள் சாத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற, பழமையான, பெரிய கோவில்கள் அனைத்தும் நேற்று நடை சாத்தப்பட்டு இருந்தன. எனினும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து கோபுரங்களை கையெடுத்து கும்பிட்டு, நடை அருகே விளக்கேற்றி, சூடம் கொளுத்தி வழிபட்டு சென்றார்கள்.
பண்ணாரியில்...
புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில்களில் நேற்று நடை சாத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பண்ணாாி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தார்கள். ஆனால் நடை சாத்தப்பட்டு இருந்ததால் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்துவிட்டு சென்றார்கள். சென்னிமலை முருகன் கோவிலில் படிக்கட்டுகள் வழியாக யாரும் மலைக்கு செல்லாமல் இருக்க அடிவாரத்திலுள்ள நுழைவு வாயிலில் கயிறு கட்டி தடை செய்யப்பட்டிருந்தது.
பூஜைகள் நடந்தன
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சைமலை, பவளமலை முருகன் ,கோபி சாரதா மாரியம்மன், ஆஞ்சநேயர், அந்தியூரில் பத்ரகாளியம்மன் மற்றும் ஊஞ்சலூர். பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், அம்மாபேட்டை, சிவகிரி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அறச்சலூர், தாளவாடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுபட்ட கோவிலின் நடைகள் சாத்தப்பட்டன. கோவில் நடைகள் சாத்தப்பட்டாலும் முறையாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் நிறுத்தப்படாமல் நடைபெற்றன. 

Next Story