திசையன்விளை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது கேரளாவில் பதுங்கியவரை போலீசார் மடக்கி பிடித்தனர்
பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை, ஜன.8-
திசையன்விளை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு பஜாரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்புக்கு பாடம் எடுக்க சென்றார். அப்போது வகுப்பறையில் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிகிறது.
தமைறைவு
இதுகுறித்து மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
பணியிடை நீக்கம்
மேலும், தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. அவரை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
தலைைம ஆசிரியர் கைது
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று கேரளாவுக்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு, போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story