வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை: கோவில்கள் முன்பு வழிபட்ட பக்தர்கள்


வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை: கோவில்கள் முன்பு வழிபட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 8 Jan 2022 3:02 AM IST (Updated: 8 Jan 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

கோவில்கள் முன்பு பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர்

நெல்லை, ஜன.8-
வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவில்கள் முன்பு பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர்.
3 நாட்கள் தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வந்தனர். ஆனால் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் அவர்கள் கோவில் முன்பு நின்று சாமியை வழிபட்டு சென்றனர். 
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவில், டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பூட்டப்பட்டு இருந்ததால், அவற்றின் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
வழிபாட்டு தலங்கள்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் பலரும் வெளியில் நின்றே வழிபட்டு சென்றனர். நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் ஆகிய கோவில்களும் நேற்று பூட்டப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் அந்த கோவில்களுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். எனினும் கோவில்களில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.
இதேபோல் மேலப்பாளையம், பேட்டை, டவுன், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருந்தன. வழக்கமாக வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகை நேற்று நடத்தப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகையை நடத்தினர்.
இதேபோன்று பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயமும் மூடப்பட்டு இருந்தது.
பாபநாசம் கோவில்
இதேபோல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பாபநாசம் பாபநாசநாதர் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கோவில் வளாகம், பாபநாசம் படித்துரை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் இந்த கோவில்களுக்கு வந்த பக்தர்களை போலீசார் சுமார் 1 கிலோ மீட்டருக்கு முன்னதாக டாணா முக்கு என்ற பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி இருந்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story