பாளையங்கோட்டையில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மாநகராட்சி திருமண மண்டபம்
மாநகராட்சி திருமண மண்டபம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது
நெல்லை:
பாளையங்கோட்டையில் மாநகராட்சி திருமண மண்டபம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 25 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தனியார் ஆஸ்பத்திரி, வீடுகளிலும் தொற்று பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை மையமாக மாற்றம்
இதற்கிடையே கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையங்களாக உள்ளன.
தற்போது பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் 8 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு வருபவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் பணியில் இருப்பார்கள்.
மேலும் கடந்த கொரோனா தொற்று காலங்களில் அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்களையும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலவேம்பு கசாயம்
இதற்கிடையே தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் நல சங்கமும், சித்த மருத்துவ கல்லூரியும் இணைந்து பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story