நெல்லை அருகே பரிதாபம்: விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த 2 பேர், லாரி மோதி பலி


நெல்லை அருகே பரிதாபம்: விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த 2 பேர், லாரி மோதி பலி
x
தினத்தந்தி 8 Jan 2022 3:10 AM IST (Updated: 8 Jan 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த 2 பேர், லாரி மோதி பலியானார்கள்

நெல்லை:
நெல்லை அருகே விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த 2 பேர், லாரி மோதி பலியானார்கள்.
கட்டிட தொழிலாளர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (வயது 27), மயில்ராஜ் (23). 
கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட வேலையை முடித்து விட்டு தங்கள் ஊருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சீனிவாசன் ஓட்டினார்.
லாரி மோதியது
நெல்லை அருகே தாழையூத்து - தென்கலம் ரோட்டில் தெற்கு மலை காலனி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை சீனிவாசன் முந்தி சென்றார்.
அப்போது எதிரே மணப்படை வீடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக உர மூட்டைகள் மீது சீனிவாசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன், மயில்ராஜ் ஆகியோர் சாலையில் விழுந்தனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் பின்னால் வந்த லாரி மோதியது. அவர்கள் 2 பேர் மீதும் லாரியின் டயர் ஏறி இறங்கியது.
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து உடனடியாக தாழையூத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன், மயில்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக எந்த காயமின்றி உயிர் தப்பினார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.................

Next Story