ஒரே நாளில் 264 பேர் பாதிப்பு; நெல்லை, தூத்துக்குடியில் வேகமெடுக்கும் கொரோனா தென்காசியில் 4 பேருக்கு தொற்று
தென்காசியில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தென்காசியில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
கொரோனாவுக்கு முதியவர் பலி
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 352 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 235 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று இறந்தார். இதுவரை 437 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடியில் 160 பேர் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்து 225 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 56 ஆயிரத்து 211 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் நேற்று 2 பேர் உள்பட இதுவரை 26 ஆயிரத்து 936 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 44 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 486 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story