கா்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? - மந்திரி சுதாகர் பரபரப்பு பேட்டி


கா்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? - மந்திரி சுதாகர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 4:16 AM IST (Updated: 8 Jan 2022 4:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா என்பது குறித்து சுகாதார துறை மந்திரி சுதாகர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அதை தடுக்க சில நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு தீர்வு அல்ல. அதனால் கர்நாடகத்தில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்பது அரசுக்கு தெரியும்.

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பொதுமக்களின் நலன் கருதி முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து யோசிக்கவே இல்லை. முழு ஊரடங்கு கடந்த காலங்களில் நடைபெற்ற விஷயம். இனி மாநிலத்தில் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பே இல்லை. கொரோனா 3-வது அலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்கும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பயப்பட தேவை இல்லை

  கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது சரியாக தெரியாமல் இருந்தது. இதில் எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி வந்துள்ளது. மற்றொரு புறம் மாத்திரைகள் வருகின்றன. அதனால் இந்த கொரோனா பரவலை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம்.

  கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. நாங்கள் அதிகளவில் தடுப்பூசிகளை போட்டுள்ளோம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரம் குறைவாக இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அவசியமானது. அந்த பணியை அரசு செய்கிறது. இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள், உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதில் யாருக்கும் தயக்கம் இருக்கக்கூடாது. இதன் மூலம் தங்களை காப்பது மட்டுமின்றி குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியும். தேவையற்ற குழப்பங்களை பற்றி கவலைப்படாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் ஒரே வழி. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story