வீட்டைவிட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்ட மூதாட்டி
ஹாவேரியில் நிலம், வீடுகளை அபகரித்துக் கொண்டு வீட்டைவிட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஹாவேரி:
சினிமா பாணியில்...
தமிழில் ‘வாட்ச்மேன் வடிவேலு’ என்ற ஒரு திரைப்படம் 1994-ம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் நடிகர் சிவக்குமாரும், அவரது மகனாக ஆனந்த் பாபுவும் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில் சிவக்குமாருக்கு தெரியாமல், அவரது நிலத்தையும், வீட்டையும் ஆனந்த் பாபு தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்திருப்பார்.
இதுபற்றி அறிந்த சிவக்குமார் கோர்ட்டில் தன் மகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்று தனது நிலத்தை மீட்பார். அந்த சினிமா படம் பாணியில் ஹாவேரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மூதாட்டி
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா வீராபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிரேமவ்வா ஹலவன்னவர்(வயது 76). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 4 பிள்ளைகள். 4 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் இறந்துவிட்டார்.
இதனால் பிரேமவ்வா ஆதரவின்றி தனிமையில் வசித்து வந்தார். இதனால் தாயை யார் பராமரிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அவரது 2 மகன்களான தனிகுமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுடைய தாயை கவனித்துக் கொள்வதாக கூறினர்.
வீட்டைவிட்டு விரட்டினர்
ஆனால் அவர்கள் இருவரும் பிரேமவ்வாவின் பெயரில் இருந்த 3 ஏக்கர் 32 சென்ட் நிலத்தை அவருக்கு தெரியாமலேயே நூதன முறையில் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர். மேலும் அவரது பெயரில் அதே கிராமத்தில் இருந்த 2 வீடுகளையும் அவர்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இதுபற்றி அறிந்தபோது பிரேமவ்வா ஆவேசம் அடைந்து கேள்வி எழுப்பினார்.
ஆனால் சொத்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட 2 மகன்களும், தாயை கவனிக்காமல் அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்தனர். இதனால் ஆதரவின்றி தவித்த பிரேமவ்வா, கிராமத்தைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் ஹாவேரி டவுனில் உள்ள பெண்கள் அமைதி மையத்தில் சேர்ந்தார்.
புகார்
அது ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் மையம் ஆகும். அந்த மையத்தில் சேர்ந்த பிரேமவ்வா அங்கு வசித்து வரும் ஆதரவற்றோருடன் அன்பு பாராட்டி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் தன் மீது பாசம் காட்டாமல், தன்னிடம் இருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தன்னை வீட்டு விட்டு விரட்டியடித்த மகன்களுக்கு பாடம் புகட்ட பிரேமவ்வா நினைத்தார்.
இதுபற்றி அவர் பெண்கள் அமைதி மைய நிர்வாகி மூலம் சாவனூர் துணை மண்டல அதிகாரியிடம் புகார் செய்தார். அதில் தனது பெயரில் இருந்த சொத்துக்களை தன்னுடைய மகன்கள் அபகரித்துக் கொண்டது மட்டுமல்லாமல், தன்னை கவனிக்காமல் வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும், அதனால் அவர்களிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சொத்துக்கள் மீட்பு
அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்திய துணை மண்டல அதிகாரியும், தாசில்தார் எரிசாமியும், பிரேமவ்வாவின் மகன்களிடம் இருந்து அவரது சொத்துக்களை மீட்டனர். பின்னர் அவற்றை பிரேமவ்வாவிடம் ஒப்படைத்தனர். தன்னுடைய சொத்துக்கள் மீண்டும் தனக்கு கிடைத்ததைவிட தனது மகன்கள் தன்னை கவனிக்காததை நினைத்து பிரேமவ்வா கதறி அழுதார்.
பின்னர் அவர் தனக்கான நீதியை பெற்றுத்தந்த அதிகாரிகளுக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவம் ஹாவேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story