‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:15 PM IST (Updated: 8 Jan 2022 12:15 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதிய இருக்கைகள் பொருத்தம்; பயணிகள் மகிழ்ச்சி


சென்னை கிண்டி ஆசர்கானா பஸ் நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் புதிய இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின் இணைப்பு பெட்டி அபாயம்

சென்னை ஓட்டேரி வள்ளுவன் தெருவில் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. மழை பெய்தால் இந்த மின் இணைப்பு பெட்டியை தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. இதனால் மிகுந்த அச்சமாக உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, இந்த மின் இணைப்பு பெட்டியை மாற்றிட வேண்டும்.

- பொதுமக்கள்.

மூடி இல்லாத கால்வாய்

சென்னை பெரம்பூர் ஏ.ஏ. சாலையில் மழைநீர் கால்வாய் மூடி இல்லாமல் திறந்தநிலையில் உள்ளது. யாரும் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக குச்சிகள் மேலே போட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.பி.பரந்தாமன், பெரம்பூர்.

இருக்கைகள் மாயம்

சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள 5 சி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் மாயமாகி உள்ளது. எனவே வயதான பயணிகள் சிரமம் அடைகிறார்கள். இந்த சாலை முதல்-அமைச்சர் தினமும் சென்று வரும் பாதை ஆகும். எனவே இந்த பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள்

கேமரா கண்காணிக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ள பகுதி எதிரே உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா தரையை பார்த்தவாறு தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் எந்தவித பயனும் இல்லை என்பதால், இந்த கண்காணிப்பு கேமரா கண்காணிக்கப்படுமா?

-முருகதாஸ், கொளத்தூர்.

சுகாதார சீர்கேடு

சென்னை பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெரு நுழைவுவாயில் பகுதியில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்த குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிறைந்துள்ளதால் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இரை தேடி வரும் கால்நடைகள் குப்பைகளை தூர்வாருகின்றன. இதனால் இந்த பகுதி அலங்கோலமாகவும், சுகாதார சீர்கேடாகவும் இருக்கிறது.

-சுப்புராஜ், பொழிச்சலூர்.

சிதிலமான பயணிகள் நிழற்குடை


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நெற்குன்றம் ஊராட்சியில் உள்ள நெற்குன்றம் பயணிகள் நிழற்குடை கடந்த ஓராண்டாக சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது. பயணிகள் அமரும் இருக்கைகள் சின்னாப்பின்னமாக இருக்கிறது. இந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

-ஆர்.லோகேஸ்வரராவ், புதுக்குப்பம்.

ஏரி மதில் சீரமைக்கப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் பாரிவாக்கம் ஊராட்சியில் ஏரியின் மதில்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இதனால் ஜே.ஜே.நகர், பக்தவச்சலம் நகர், பால்வாடி ஆகிய தெருக்களில் சூழ்ந்துள்ள மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைகிறோம். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

-பி.விஸ்வநாதன், பாரிவாக்கம்.

மினி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

தாம்பரம்-குண்டுமேடு அண்ணாநகர் (பெருங்களத்தூர்) பகுதிக்கு S 90 என்ற மினிபஸ் (சிற்றுந்து) கடந்த 2017-ம் ஆண்டு இயக்கப்பட்டது. அனைவருக்கும் இந்த பஸ் சேவை பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மினி பஸ் சேவையை மீண்டும் இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும்.

-சமூக ஆர்வலர் சண்முகநாதன், பெருங்களத்தூர்.

பன்றிகள் தொல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகில் உள்ள அம்ருத் நகர் குடியிருப்பு பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவி விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

-எஸ்.மகேஷ், மதுராந்தகம்.

சாலை மோசம்

சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் இருந்து ஆதம்பாக்கம் வரை உள்ள சாலையில் ஒரு பகுதி மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்க வேண்டி உள்ளது. வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை இருக்கிறது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் இந்த சாலை எப்போது சீரமைக்கப்படும்?

- அய்யப்பன், வேளச்சேரி.

கழிவுநீர் பிரச்சினை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெரியார் நகர் சாமிரெட்டி 3-வது தெருவில் கழிவுநீர் பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

-முத்துக்குமார், திருவள்ளூர்.

வளைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா கன்னிவாக்கம் கிராமம் வழியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிபாகம் வளைந்து உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், கன்னிவாக்கம்.

மழைநீர் வடிகால்வாய் சேதம்


சென்னை கொளத்தூர் சீனிவாச நகர் 5-வது குறுக்கு தெரு சாலையில் மழைநீர் வடிகால்வாய் சேதம் அடைந்துள்ளது. சரியாக மூடப்படாமல் மூடி மேல் நோக்கி இருக்கிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளுக்கு இன்னலாகவும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், கொளத்தூர்.

Next Story