மகனுக்கு திருமணம் நடக்க பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி
மகனுக்கு திருமணம் நடக்க பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஐயப்பா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 76). இவருடைய மனைவி சவுந்தரி(66). இவர்களது மகன் ஸ்ரீராம்(41). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சீனிவாசன் வீட்டுக்கு வந்தார். உங்கள் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டுமானால் தங்க சங்கிலியை வைத்து வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறினார். அதை நம்பிய மூதாட்டி சவுந்தரி தனது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார்.
அதை வாங்கிய முதியவர், பூஜை செய்வது போல் நடித்து நூதன முறையில் நகையை திருடிச்சென்று விட்டார். அவர் சென்ற பிறகு நகை மாயமாகி இருப்பதை கண்டு சீனிவாசன்-சவுந்தரி தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். இந்த நூதன மோசடி குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட முதியவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story