திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 6 இடங்களில் ஆதார் பதிவு மையம் - கலெக்டர் தொடங்கி வைத்து ஆய்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 6 இடங்களில் ஆதார் பதிவு மையம் - கலெக்டர் தொடங்கி வைத்து ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2022 2:29 PM IST (Updated: 8 Jan 2022 2:29 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு ஆதார் பதிவு மையத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மேலும், அங்கு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 224 மாணவ, மாணவியர்களில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 443 மாணவர்களுக்கு ஆதார் எண் பெறப்படாமல் உள்ளனர்.

எனவே அதிக ஆதார் எண் பெறப்படாத பகுதிக்கு உட்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் ஒன்றியத்தில் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பெரியபாளையம், பூந்தமல்லி ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர் ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்னேரி, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பொப்பிலிராஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 6 ஆதார் மையங்கள் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கொரோனா சார்ந்த முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் எண் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதிக மாணவர்கள் உள்ள பகுதிகளுக்கு அந்தப் பள்ளிக்கே சென்று அவர்களுக்குரிய ஆதார் எண் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story