கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2022 4:24 PM IST (Updated: 8 Jan 2022 4:24 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் உள்ள விதிமீறல்கள் தொடர்பாக கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் உள்ள விதிமீறல்கள் தொடர்பாக கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
மாரியம்மன் கோவில் 
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலில் கனரக வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை நிறுத்தி பூஜை செய்து பிறகு புறப்பட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலை வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெயராமன், தர்மபுரி உதவி ஆணையர் பிரகாஷ், திருத் தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
கட்டிடங்கள் ஆய்வு 
கோவிலில் உள்ள பதிவேடுகள், கோவிலின் பரப்பளவு, அங்கு அமைந்துள்ள கட்டிடங்கள், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி இந்து சமய அறநிலையத்துறை, திருத்தொண்டர்கள் சபை சார்பில் கோவில்களில் ஆய்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
முறைகேடுகள் 
அந்த வகையில் அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவில் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் சில தனி நபர்கள் கோவிலை ஆக்கிரமித்துள்ளனர். அறநிலையத்துறைக்கு தெரியாமல் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நானும் பார்வையிட்டுள்ளேன்.
இங்கு நடந்துள்ள தவறுகள் குறித்து ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும். மேலும் அறநிலையத்துறையில் தவறாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்து நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்படும். மேலும் இந்த கோவில் வளாகத்தில் மரம் வெட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் புகார் செய்யப்படும்.
போலி ஆவணங்கள், முத்திரைகள் மூலம் தனி நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதற்கும் கோவிலுக்கும் சம்பந்தம் இல்லை. பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அரசு சொத்து அபகரித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் தடுக்கவில்லை.இது தொடர்பாக அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அலுவலத்தில் ஆய்வு நடைபெற்றது.

Next Story