ஓசூரில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஓசூரில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Jan 2022 8:01 PM IST (Updated: 8 Jan 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஓசூர்:
ஓசூரில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கல்லூரி மாணவர்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகபூப் பாஷா. இவருடைய மகன் ஷேக் முகமது அப்சல் (வயது 21). இவர் தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமாவான ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா வீட்டில் தங்கி ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நண்பகலுக்கு பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணி வரை பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி ஓசூர் பாரதிதாசன் நகர் அருகே உள்ள வள்ளுவர் நகரில் அவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன.
இதுதொடர்பாக ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரை பிடித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மீது உத்தனபள்ளி, ராயக்கோட்டை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கு இருந்தது தெரியவந்தது.
கொலை
சம்பவத்தன்று இரவு ஓசூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஷேக்முகமது அப்சலை, ராஜேசும், அவருடைய நண்பர் திலீப்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சம்பவ இடத்தில் வைத்து வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஷேக்முகமது அப்சலிடம் பணம், செல்போன் எதுவும் இல்லாததால், ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொன்றுவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. 
திலீப்குமார் மீது ஓசூர் டவுன், ஓசூர் அட்கோ ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், போலீசார் ராஜேசையும், திலீப்குமாரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று ராஜேஷ் மற்றும் திலீப்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

Next Story