கொரோனா சிகிச்சை மையமாக அரசு கலைக்கல்லூரி மாற்றம்
கூடலூரில் கொரோனா சிகிச்சை மையமாக அரசு கலைக்கல்லூரி மாற்றப்பட்டது. இதனை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடலூர்
கூடலூரில் கொரோனா சிகிச்சை மையமாக அரசு கலைக்கல்லூரி மாற்றப்பட்டது. இதனை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கும் பணி சுகாதாரத்துறையினரால் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 241 படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதை கலெக்டர் அம்ரித் நேற்று பார்வையிட்டு, சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
அடிப்படை வசதிகள்
தொடர்ந்து மையத்தில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தங்களது பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளார்களா? என்று விசாரிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
வாரந்தோறும் தமிழக அரசால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகர்புறங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் அரசு கலைக்கல்லூரி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, 241 படுக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், துணை இயக்குனர் பாலுசாமி, கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story