சமூக வலைதளங்களை பெண்கள் கவனமாக கையாள வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்


சமூக வலைதளங்களை பெண்கள் கவனமாக கையாள வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்
x

சமூக வலைதளங்களை பெண்கள் கவனமாக கையாள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தற்போது 15 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கென தனியாக சட்டங்கள் உள்ளன. அதில் மரண தண்டனை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது.  பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். 

பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181 மற்றும் 14417 கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ெஜயக்குமார் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் அவ்வை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனிதா, விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாரி, பொன்ராஜ், முருகன், பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது செய்திருந்தார்.

Next Story