நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு


நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2022 9:05 PM IST (Updated: 8 Jan 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல்:
நாமக்கல் நகரில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார்.
கடைகளில் ஆய்வு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கடைகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல் நகராட்சி ரெங்கநாதர் கோவில் தேர் நிறுத்துமிடம் தொடங்கி கடை வீதி, கந்து முத்துசாமி தெரு, தூபன் குமாரசாமி தெரு, நாமக்கல் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், காய்கறி கடைகள், நகைக்கடைகள், பேப்பர் கடைகள், பலசரக்கு கடை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்.
அபராதம்
இந்த ஆய்வின் போது கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து உள்ளார்களா? போதிய இடைவெளியை கடைப்பிடித்து விற்பனை நடைபெறுகிறதா? என்றும், கிருமிநாசிணி திரவம் வைக்கப்பட்டுள்ளதா? வெப்ப பரிசோதனை கருவி உள்ளதா? என்றும் பார்வையிட்டார். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் வாகன ஓட்டிகள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நாமக்கல் அருகே உள்ள வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்துள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புதன்சந்தை பகுதிகளில் உள்ள கடைகளில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
கட்டுப்பாட்டு அறை
முன்னதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும், அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளின் உடல் நிலை குறித்து சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story