5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆண்டிப்பட்டி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போடி (மீனாட்சிபுரம்):
ஆண்டிப்பட்டி அருகே வண்டியூரில் கிருஷ்ணன் கோவில் மலை உள்ளது. இந்த மலையின் பாறையில் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் மற்றும் பேராசிரியர்கள், திண்டுக்கல் நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து கண்டுபிடித்தனர். இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:-
தேனி மாவட்டம் பிற்கால பாண்டியர் காலத்தில் அழநாடு என்ற தனி நிர்வாக பிரிவாக இருந்துள்ளது. இந்த பிரிவிற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி அருகே வண்டியூர் கிருஷ்ணன் கோவில் மலையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களின் அமைப்பை வைத்தும், மற்ற இடங்களில் வரையப்பட்டுள்ள இதே மாதிரி ஓவியங்களை ஒப்பிட்டதில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களாக இருக்கலாம். இங்குள்ள பாறையில் வெள்ளை நிற ஓவியத்தில், வேட்டைக்கு சென்ற வீரன், தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி நிற்பது போன்று வரையப்பட்டுள்ளது. அருகே உள்ள மற்ற கருப்பு வண்ண ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளது. கருப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், வெள்ளை நிற ஓவியங்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது.
ஆனால் இந்த இடம், மனிதன் தங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லை. இருப்பினும் இங்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களை வைத்து பார்க்கும்போது, தொன்மையான வேட்டை சமூகத்தை சேர்ந்த இனக்குழுவினர், விலங்குகளை வேட்டையாடுவதற்காக இங்கு தங்கி இருக்கின்றனர். அதன் நினைவாக இந்த ஓவியங்களை வரைந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story