நடுவழியில் திடீரென நின்ற விழுப்புரம் பயணிகள் ரெயில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது
விழுப்புரத்தில் இருந்து சென்ற பயணிகள் ரெயில் நடுவழியில் திடீரென நின்றது. இதனால் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தாம்பரத்திற்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் காலை 7.15 மணியளவில் செங்கல்பட்டு அருகே தொழுபேடு என்ற இடத்தில் சென்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரங்கள் சுழலாமல் நடுவழியிலேயே ரெயில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக மதுரை- டெல்லி சென்ற நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரிலும், திருச்செந்தூர்- சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்திலும் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் தொழுபேடுக்கு விரைந்து சென்று விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரெயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்த பிறகு அந்த ரெயில் காலை 9.15 மணிக்கு அங்கிருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டது. அதன் பிறகு நிஜாமுதீன், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் புறப்பட்டுச்சென்றன.
ரெயில்கள் தாமதம்
இந்த சம்பவம் காரணமாக மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து செல்லக்கூடிய ரெயில்கள் தாமதமாக சென்றன. அதன்படி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு காலை 9.45 மணிக்கு வர வேண்டிய சென்னை- புதுச்சேரி பயணிகள் ரெயில் 10 மணிக்கும்,
10 மணிக்கு வர வேண்டிய சென்னை- திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.15 மணிக்கும், 11.30 மணிக்கு வர வேண்டிய சென்னை- குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 11.45 மணிக்கும் தாமதமாக வந்தன. அதன் பின்னர் அடுத்த 10 நிமிடங்களில் மேற்கண்ட 3 ரெயில்களும் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றன.
Related Tags :
Next Story