விழுப்புரத்தில் மஞ்சள் பைகளுக்கு தட்டுப்பாடு: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது திடீர் நிறுத்தம் ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விழுப்புரத்தில் மஞ்சள் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 4-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 318 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 434 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என 1,254 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் மொத்தம் 1,800 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் அவர்களில் கடந்த 4-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 800 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் மீதமுள்ள 1,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
திடீர் நிறுத்தம்
இதற்காக ஏற்கனவே டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் அந்த ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச்செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் மஞ்சள் பை காலியானதால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க வந்த பொதுமக்கள், பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காத ஆத்திரத்தில் அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.
மேலும் மஞ்சள் பைகள் குறைவாக வந்துள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (நாளை) மஞ்சள் பைகள் வந்தவுடன் மீண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்,
அனைவருக்கும் விடுதலின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் மேலும் சில ரேஷன் கடைகளில் மஞ்சள் பைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
Related Tags :
Next Story