பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்றதாக உள்ளதா? என்று தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் 6 வேன்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக தனியார் பள்ளிகள் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 88 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 293 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதால் 30 சதவீத வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 95 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்து வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) அருணாசலம், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நல்லதம்பி, பிரான்சிஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறியதாவது:-
தகுதி சான்றிதழ் ரத்து
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 தனியார் பள்ளிகள் 293 வாகனங்களை மாணவர்களை பள்ளிகளுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன. இதில் கொரோனா ஊரடங்கால் தற்போது 30 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் வேக கட்டுப்பாட்டு கருவியும், அவசர கால கதவும் சரியாக இயங்காத 6 வேன்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள், தீத்தடுப்பு குறித்து தனியார் பள்ளி வாகனங்களின் டிரைவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story