திருக்கோவிலூர் அருகே பரபரப்பு பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோவை வழிமறித்து கண்ணாடி உடைப்பு தப்பி ஓடிய 4 வாலிபர்கள் கைது
திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருக்கோவிலூர்
ஆட்டோ டிரைவர்
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா மகன் அர்வாஸ்(வயது 23). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆவி கொளப்பாக்கம் அருகே வந்தபோது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து டிரைவர் அர்வாசிடம் தகராறு செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டோவில் இருந்த 4 மாணவிகளும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் ஓடோடி வந்தனர்.
அனால் அதற்குள் 4 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சினிமாவில் வருவதை போன்று நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் நடந்த சம்பவத்தை அறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்தவர்கள் திருக்கோவிலூர் அருகே உள்ள போமுதலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன் என்கிற மோகன்ராஜ்(21), ஆவி கொளப்பாக்கம் கிராமம் சுந்தரமூர்த்தி மகன் வெங்கடேசன்(28), விஜயகுமார் மகன் வினோத்(21), உச்சான் மகன் பாஸ்கரன்(26) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற ஆட்டோவை 4 வாலிபர்கள் வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story