கரூர் உழவர் சந்தை- மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 11:15 PM IST (Updated: 8 Jan 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

இன்று முழு ஊரடங்கையொட்டி கரூர் உழவர் சந்தை மற்றும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. உப்பிடமங்கலத்தில் வியாபாரம் மந்தமாக நடந்தது.

கரூர், 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் வாரநாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
அப்போது அத்தியாவசிய பணிகளான மருத்துவம், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம், மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)முழு ஊரடங்கு என்பதால் காய்கறி சந்தைகள், கடைகள் இயங்காது என்பதால், நேற்று காலை கரூர் உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வாரச்சந்தை
நேற்று கரூர் உழவர்சந்தைக்கு 14.50 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.6.6 லட்சம் ஆகும். விவசாயிகளின் வருகை 95 ஆகவும், பொதுமக்கள் வருகை 2 ஆயிரத்து 417 ஆகவும் இருந்தது. இதேபோல் கரூர் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று வாரச்சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் செயல்படாது என்பதால் அசைவ பிரியர்கள் நேற்று அதிகளவில் கரூர் மீன்மார்க்கெட்டில் மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.
உப்பிடமங்கலம்
தமிழக அளவில் புகழ் பெற்ற வார சந்தைகளில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் வாரச்சந்தையும் ஒன்றாகும். இந்த சந்தை மாடுகள் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். வார நாட்களில் சனிக்கிழமை காலையில்  கன்று குட்டிகள் மற்றும் இறைச்சி மாடுகள் அதிக அளவில் விற்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலையில் கறவை மாடுகள் மற்றும் வளர்ப்பு மாடுகள் அதிக அளவில் விற்கப்படும். 
இங்கு விற்கப்படும் மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை வாங்க கரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகளும் விவசாயிகளும் வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், விதை தானியங்கள், விதை நாற்றுக்கள், விவசாய இடுபொருட்கள், ஜவுளிகள் என பல்வேறு வகையான பொருட்களை வியாபாரிகளும் விவசாயிகளும் இங்கு கொண்டுவந்து விற்கின்றனர். இவற்றை வாங்குவதற்கு உப்பிடமங்கலம் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் இந்த சந்தைக்கு வந்து செல்வர். 
குறைந்த அளவே...
சனி, ஞாயிறு என இரண்டு நாட்களிலும் இந்த சந்தையால் பல லட்ச ரூபாய் பணப்புழக்கம் உப்பிடமங்கலம் பகுதியில் இருக்கும். இப்படி புகழ் பெற்ற இந்த வாரச்சந்தை சென்ற ஆண்டு கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் சில மாதங்கள் மூடி கிடந்தது. பின்பு திறக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட வேண்டிய சந்தை நேற்று சனிக்கிழமையே கூடியது. ஆனால் நேற்று கூடிய சந்தைக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் குறைந்த அளவு வந்திருந்தனர். இதனால் வியாபாரம் மந்தமாக நடந்தது. அவர்களில் சிலர் முக கவசம் அணியாமல் இருந்ததை காண முடிந்தது. 

Next Story