தடுப்புகளை சேதப்படுத்தி தடையை மீறிச் சென்ற 2 பேர் கைது
வேலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்புகளை சேதப்படுத்தி தடையை மீறிச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்புகளை சேதப்படுத்தி தடையை மீறிச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா பரவல்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாநகராட்சி பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்தவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் காந்திரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் தங்குவார்கள்.
சிகிச்சை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் நகரை சுற்றி வலம் வருகின்றனர். இவர்கள் வெளியே செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2 பேர் கைது
இந்த நிலையில் பாபுராவ் தெருவில் லாட்ஜ்களில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் பலருக்கு கொரோனா வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களும், அவர்கள் உடன் வந்தவர்களும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பாபுராவ்தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த பாதையில் அங்குள்ளவர்கள் வெளியில் வராதவாறு தகரத்தால் பாதை அடைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அங்கு சரக்கு ஆட்டோவில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் பணியில் சைதாப்பேட்டையை சேர்ந்த தணிகைவேல் (வயது 49), தியாகராஜன் (31) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
பாபுராவ் தெருவில் தண்ணீர் கேன் வினியோகம் செய்வதற்காக தகரத்தால் ஆன தடுப்புகளை சேதப்படுத்தி அகற்றி தடையை மீறிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார் சென்றது. நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story