மணல் கொள்ளையர்களுக்கு நிலத்தை விற்றால் பட்டா ரத்து; அதிகாரி எச்சரிக்கை
வாணியம்பாடி பகுதியில் பாலாற்று கரையோரம் உள்ள விவசாய நிலங்களை, மணல் கொள்ளையர்களிடம் கொடுத்தால் பட்டா ரத்து செய்யபடும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் பாலாற்று கரையோரம் உள்ள விவசாய நிலங்களை, மணல் கொள்ளையர்களிடம் கொடுத்தால் பட்டா ரத்து செய்யப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.
தாசில்தார் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு, மேட்டுப்பாளையம், உதயேந்திரம் ஆகிய பகுதியில் பட்டா இடத்தில் மணலை எடுத்து விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கச்சேரி சாலையில் பாலாற்றின் அருகே இருக்கக்கூடிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வைத்திருக்கும் நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு அந்த இடத்தை மணலை எடுப்பதற்காக பல லட்சத்துக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு விற்கப்பட்ட இடங்களில் மணல் கொள்ளையர்கள் மணல் குவாரி அமைத்து டிப்பர் லாரிக்கு ரூ.20 ஆயிரம், டிராக்டருக்கு ரூ.8 ஆயிரம் என மணலை விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரிய வந்தது.
எச்சரிக்கை
அதன் அடிப்படையில் தாசில்தார் மோகன் அந்த இடத்தினை ஆய்வுசெய்து இதுபோன்ற சட்ட விரோதமாக மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் பட்டா நிலங்களில் மணல் கொள்ளையர்களிடம் சட்டவிரோதமாக விற்கப்படும் விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.
மேலும்மணல் கொள்ளையர்களுக்கு வாகனங்கள் செல்வதற்காக பாதைக்காக இடம் கொடுத்தாலும் நிலங்களின் பட்டா ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story