மராட்டியத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் இரவு 11 மணிக்கு பிறகு மக்கள் வெளியே வர தடை
மராட்டியத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும், நீச்சல் குளங்கள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் அமல்
மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலத்தில் தினந்தோறும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த இரவு நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருந்தது. எனினும் நோய் பரவல் குறையாமல் உள்ளது.
எனவே மாநில அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மேலும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை இந்த கட்டுபாடுகள் அமலில் இருக்கும்.
இரவில் செல்ல தடை
இதன்படி 10-ந் தேதி முதல் பொது மக்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வெளியே செல்ல கூடாது. மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகள் மட்டும் நடைபெறலாம். இதேபோல வேலை முடிந்து வீடு திரும்புவர்கள், ரெயில், விமானநிலையம் போன்ற இடங்களுக்கு செல்பவர்களுக்கும் தடையில்லை.
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக வெளியில் செல்ல கூடாது. தனியார் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கு மேல் ஊழியர்கள் வருகை தரக்கூடாது. முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும். ஏற்கனவே அறிவித்து உள்ளபடி திருமணம், பொது நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேர் வரை கலந்து கொள்ளலாம். பள்ளி, கல்லூரிகள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை மூடப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள் மூடல்
நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பா, வெல்னஸ் மையங்கள், பியூட்டி பார்லர்களை திறக்க கூடாது. முடிதிருத்தம் செய்யும் சலூன்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். பொழுது போக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்கா, கோட்டைகள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் மூடப்படும்.
வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். ஓட்டல்கள், உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கலாம். திரையரங்குகளில் தடுப்பூசி போட்ட 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
Related Tags :
Next Story