சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 12:06 AM IST (Updated: 9 Jan 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமானில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

வலங்கைமான்;
கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமானில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். 
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசு பொருட்களில் தேங்காய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. 
கைது
இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் மதியழகன், விவசாய சங்க ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஷ்கண்ணா, விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் பூசாந்திரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 
கூத்தாநல்லூர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிறிது நேரத்துக்கு பின் கலைந்து சென்றனர்.

Next Story