200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதே போல குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே 90-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் முக்கியமாக முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.
இதற்கிடையே கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 140 படுக்கைகள் தற்போது தயாராக உள்ளன. மேலும் 650 படுக்கைகளை தயார் செய்யும் பணி நடக்கிறது.
பாலிடெக்னிக் கல்லூரி
அதோடு கடந்த கொரோனா பரவலின் போது கோணம் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டன. அதே போல தேவைப்படும் பட்சத்தில் தற்போதும் கல்லூரிகளை கொரோனா சிறப்பு மையமாக மாற்ற கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் மேற்பார்வையில் 200 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது.
குமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுர்வேத ஆஸ்பத்திரி
இதே போல கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு கடந்த கொரோனா பரவலின் போது 237 படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு முற்றிலும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஏராளமான நோயாளிகள் தாங்களாகவே ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தனர். எனவே தற்போது இங்கு படுக்கைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். நாளை மாலைக்குள் (திங்கட்கிழமை) 100 படுக்கைகளை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக குணமடைந்த உள்நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி மற்றும் சிறப்பு வார்டுகளில் என சுமார் 2 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story