தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Jan 2022 1:11 AM IST (Updated: 9 Jan 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

தொற்று நோய்கள் பரவும் அபாயம்
தஞ்சை நீலகிரி ஊராட்சி சிவாஜி நகர் (மேற்கு) பகுதி சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிவாஜி நகர் (மேற்கு) பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவாஜிநகர்வாசிகள், தஞ்சை.
நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து தின்றுவிடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர மற்றும் கார்களை நாய்கள் துரத்தி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மதுக்கூர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மதுக்கூர்பகுதிமக்கள், மதுக்கூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஆற்றுப்பாலத்தையும், நெடுஞ்சாலையையும் இணைக்கும் தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தார் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாபு, தஞ்சை.
மின்கம்பம் சீரமைக்கப்பட்டது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி சந்தைப்பேட்டையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் நேராக நிமிர்த்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
-சந்தைப்பேட்டை பகுதி மக்கள், ஒரத்தநாடு.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் எதிரே இரும்பிலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.


Next Story