டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 79 பவுன் நகைகள்-வெள்ளி பொருட்கள் கொள்ளை
பட்டுக்கோட்டையில், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 79 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 79 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டாக்டர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சிவராஜ். இவர் சமீபத்தில்தான் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தில் பைபாஸ் ரோடு அருகே புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
நேற்று முன்தினம் டாக்டர் சிவராஜ் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று இருந்தார். டாக்டர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் நேற்று முன்தினம் இரவு டாக்டர் வீட்டின் கொல்லைப்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
79 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை நிறுத்தி விட்டு வீட்டின் அறைக்குள் புகுந்து சுவர் அலமாரியை(கப்-போர்டு)உடைத்து அதில் இருந்த 79 பவுன் எடையுள்ள நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
சென்னையில் இருந்த டாக்டர் சிவராஜ் தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா இயங்காமல் இருப்பதை அறிந்து திடுக்கிட்டு நேற்று காலை பட்டுக்கோட்டையில் இருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் டாக்டர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கொள்ளை நடந்து இருப்பது தெரிய வந்தது.
போலீசில் புகார்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டாக்டர் சிவராஜ் உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த 79 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பதாக கூறியுள்ளார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
முன்னதாக நேற்று காலையில் கொள்ளை நடந்த வீட்டை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சையில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் "டாபி" வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அருகில் இருந்த பைபாஸ் சாலை வழியாக சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது.
வலைவீச்சு
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story