கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் - சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பேட்டி


கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் - சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 9 Jan 2022 2:21 AM IST (Updated: 9 Jan 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தலைவர்கள் ஆலோசனை

  மேகததுவில் அணை கட்ட வலியுறுத்தி ராமநகர் மாவட்டம் கனகபுராவில் இருந்து பெங்களூரு நோக்கி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்துகிறது. இந்த பாதயாத்திரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பாதயாத்திரையை கைவிட காங்கிரஸ் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

  இதுதொடா்பாக கனகபுராவில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாதயாத்திரை நடத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

திட்டமிட்டபடி பாதயாத்திரை

  மேகதாதுவில் அணை கட்ட வலியுறத்தி காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும் என்று 2 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் கொரோனா பரவி வருகிறது. காங்கிரஸ் பாதயாத்திரையை தடுக்க கொரோனா ஊரடங்கு, 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி நாளை (அதாவது இன்று) கனகபுராவில் இருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை நடத்தப்படும். அதில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படாது.

  கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பாதயாத்திரை நடத்தப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கையை கிருமிநாசினியால் சுத்தம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நீருக்கான நடை

  பாதயாத்திரையில் கலந்துகொள்பவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க 100 டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் நடத்தவில்லை. இந்த பாதயாத்திரை பெங்களூரு நகரின் குடிநீருக்காக நடத்தப்படுகிறது. பெங்களூரு மக்களுக்கு சுத்த குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நடைபயணம். இது நீருக்கான நடை.

  போலீசார் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். பாதயாத்திரை நடந்தே தீரும். கன்னட திரையுலகத்தை சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவராஜ்குமாரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். தொண்டர்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும், நாங்கள் 2 பேரும் (சித்தராமையா, டி.கே.சிவக்குமார்) நடைபயணம் மேற்கொள்வோம்.
  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story