ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது - மந்திரி கோவிந்த் கார்ஜோள் குற்றச்சாட்டு
ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஓட்டு வங்கிக்காக பாதயாத்திரை
காங்கிரஸ் சார்பில் நடக்கும் பாதயாத்திரையை அரசு எதிர்க்கவில்லை. தற்போது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று தான் காங்கிரஸ் தலைவர்களிடம், அரசு கேட்டுக் கொள்கிறது. பாதயாத்திரையில் 25 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கவும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அடுத்து ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஓட்டு வங்கிக்காகவும், கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரையை நடத்த காங்கிரசார் முயற்சிக்கின்றனர்.
கண்டிப்பாக திட்டம் நிறைவேற்றம்
காங்கிரஸ் கட்சியினர் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். அப்போது மாநிலத்தில் எந்த ஒரு நீர்ப்பாசன திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. அதிகாரத்தில் இருந்த போது மேகதாது உள்ளிட்ட எந்த நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்து விட்டு, தற்போது அரசியல் காரணங்களுக்காக அரசின் விதிமுறைகளை மீறி காங்கிரசார் பாதயாத்திரை நடத்துவது சரியல்ல.
மேகதாதுவில் அணை கட்டுவதற்காக பா.ஜனதா அரசும் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story