ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம்-காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஓசூரில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஓசூர்:
ஓசூரில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மலர் ஏல மையம் திறப்பு
ஓசூர் அருகே பேரண்டபள்ளி பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் சர்வதேச மலர் ஏல மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி ஓசூரில் மலர் ஏல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் மலர் ஏல மையத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
2 ஆயிரம் டன் சேமிப்பு கிடங்கு
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஓசூர் சர்வதேச மலர் ஏல மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இங்கு 2 ஆயிரம் டன் சேமிப்பு கிடங்கு, மலர் தண்டுகளுக்கான குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம் மற்றும் வினியோக கூடம் ஆகிய கட்டிடங்கள் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏல மையத்திற்கு, அவர்கள் விளைவிக்கும் பூக்களை நேரடியாக எடுத்து வந்து இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து உரிய விலை பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, துறையின் துணை இயக்குனர் செல்வராஜ், செயலாளர் ரவி, விற்பனை வாரிய செயற்பொறியாளர் சுவாமிநாதன், வேளாண் வணிக அலுவலர் ரமண கீதா, உதவி அலுவலர் ரமேஷ், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் சத்யா, வேப்பனப்பள்ளி முருகன், மாவட்ட கவுன்சிலரும், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை அமைப்பின் தலைவருமான பாபு என்ற வெங்கடாசலம், மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மலர் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் இதுவரை பெங்களூருவில் உள்ள பன்னாட்டு மலர்கள் ஏல மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. இது மலர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது தொடங்கப்பட்டுள்ள மலர் ஏல மையம் மூலம் ஆன்லைனிலேயே விவசாயிகள் மலர்களை விற்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் மலர்கள், மொட்டுகளாக வரவழைக்கப்பட்டு மலர் குளிர்பதன கிடங்குகளில் அதனை இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தக முறையில் வியாபாரிகளால் காணொலி காட்சி மூலம் பார்வையிடச் செய்து, தரம் முதலியவை காணொலி மூலம் அனைத்து வியாபாரிகளுக்கும் அறிவிக்கப்படும்.
பின்னர் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து ஏல முறையில் மலர்களுக்கு உச்சபட்ச விலை கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மலர்களின் தரம் குறையாமல் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து சில வாரங்கள் நீடிக்கும் வண்ணம் கட்டுமான வசதி அமைப்புகள் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
Related Tags :
Next Story