‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு பலகைக்கு விடுதலை கிடைத்தது
சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகர் மேட்டு தெருவில் உள்ள தெரு பலகை தெரியாத அளவு மண் கொட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தெரு பலகையை சூழ்ந்து கொட்டப்பட்ட மண் உடனடியாக அள்ளப்பட்டு, அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பள்ளம் உடனடி மூடல்; பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை ஆதம்பாக்கம் பாலாஜிநகர் 16-வது தெருவில் பெருமழை காரணமாக சாலையோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அபாயகரமான இப்பள்ளம் குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த பள்ளத்தை மூடியதுடன், சாலையையும் சீரமைத்துள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் மெத்தனம்
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் தெருவில் காஞ்சி கூட்டுறவு அங்காடி (ரேஷன் கடை) செயல்படுகிறது. மதியம் 1 மணிக்கு மேல் கடை அடைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் ஊழியர்கள் கடைக்கு உள்ளே தான் இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோருக்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது கிடையாது. எனவே வழக்கமான நேரத்தில் ரேஷன் கடை செயல்படவும், பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள்.
ஆபத்தான மின் இணைப்பு பெட்டி
சென்னை மயிலாப்பூர் சாரதாபுரம் 2-வது தெருவின் தொடக்கத்திலேயே ஒரு மின் இணைப்பு பெட்டி இருக்கிறது. இந்த பெட்டி கதவுகள் பெயர்ந்த நிலையிலும், வயர்கள் வெளியே தெரியும்படியும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக விளையாடும் பகுதியான இங்கு, இப்பெட்டி அபாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மின்வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?
- பாஷா, மந்தைவெளி.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குளறுபடி
தைத்திருநாளையொட்டி குரோம்பேட்டை ஜமீன்ராயப்பேட்டை குளக்கரைத்தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக நேற்று அதிகாலை 5 மணியில் இருந்தே டோக்கனுடன் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
காலை 9 மணிக்கு மேல் கடைக்கு வந்த ஊழியர், பொங்கல் பை இருப்பு இல்லை, திங்கட்கிழமை வாருங்கள் என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டார். பொதுமக்கள் அறிவுறுத்தியபின்னர்தான் இதுகுறித்த அறிவிப்பையே ஒரு வெள்ளைத்தாளில் ஒட்டி வைத்தார். பல மணி நேரம் காத்திருந்தும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
-சமூக ஆர்வலர்
பயணிகள் கோரிக்கை
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் இருந்து எழும்பூர்-அண்ணா சாலை பகுதிகளுக்கு 42, 29சி, 29ஏ (எக்ஸ்டன்சன்) ஆகிய பஸ்கள் பகல் வேலைகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் எல்லா நேரங்களிலும் இயக்கப்பட்டால் அது பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.
- வெ.ரமேஷ், பெரியார்நகர்.
மினி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கலில் இருந்து குமணன்சாவடிக்கு எஸ்-23 என்ற மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளுக்கும் இந்த சேவை பயன் அளித்தது. இந்த நிலையில் இந்த மினி பஸ் சேவை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்த மினி பஸ் சேவை மீண்டும் இயக்கப்பட்டால் அது பெரிய பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.
- ஏ.சுபைதா நிஷா, அய்யப்பந்தாங்கல்.
ஆபத்தான கால்வாய் மூடி
சென்னை திரு.வி.க.நகர் ஹைதர் கார்டன் மெயின் தெருவில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து உள்நோக்கி சென்றிருக்கிறது. ஆபத்தை அறியாமல், குறிப்பாக இரவில் இவ்வழியே நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.
- முஹமத் முனீர் ஷரீப், திரு.வி.க.நகர்.
பன்றிகள் தரும் தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் அந்தோணிநகரில் அண்ணனூர் ரெயில்வே மைதானம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மக்கள் நிம்மதிக்காக சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- இ.மதிவாணன், அந்தோணிநகர்.
நடவடிக்கை எடுப்பார்களா?
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 3-வது வார்டுக்குட்பட்ட கற்பகாம்பாள் நகர் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள்.
சுகாதார சீர்கேடு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - மண்ணிவாக்கம் பாலம் கீழே சாலையோரம் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியே சுகாதார சீர்கேடாக மாறியிருக்கிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இக்குப்பை கழிவுகள் அகற்றப்பட்டால் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதி தரும் நடவடிக்கையாக அது அமையும்.
- சமூக ஆர்வலர்.
மேம்பால பணி எப்போது முடியும்?
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையையும், ஒரகரம் செல்லும் சாலையையும் இணைக்கும் மேம்பால பணி 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் வாகன ஓட்டிகளும் பெரும் பயனுள்ளதாக அமையும். போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வாக அமையும்.
- எஸ்.விஜயகுமார், வில்லியம்பாக்கம்.
Related Tags :
Next Story