தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் தடையை மீறி சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த போலீசார்


தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள்  தடையை மீறி சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த போலீசார்
x
தினத்தந்தி 9 Jan 2022 7:19 PM IST (Updated: 9 Jan 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின. தடையை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


திண்டுக்கல்:
தமிழகத்தில் ஒமைக்ரான், டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது.
டிரோன் கேமரா
அத்தியாவசிய காரணங்களுக்காக வாடகை வாகனங்களில் வருபவர்களை மட்டும் உரிய விசாரணைக்கு பின்னர் மாவட்டத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்தவர்களை மட்டும் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
அதேநேரம் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. பார்சல் முறையில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதியை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, டிரோன் கேமராவை இயக்கி கண்காணிப்பு பணியை தொடங்கி வைத்தார்.
1,100 போலீசார் கண்காணிப்பு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முழு ஊரடங்கையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் நாள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் திண்டுக்கல்லில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வாடகை வாகன சேவையும் நிறுத்தப்பட்டதால் ரெயில்களில் வெளியூர்களுக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில்களில் வந்தவர்களும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாடகை வாகனங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
பழனி
பழனியில் முழு ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் பிரதான சாலைகளான திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, தாராபுரம் சாலை, அடிவாரம் சாலை உள்ளிட்ட சாலைகள் பரபரப்பின்றி அமைதி நிலவியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் வருகையின்றி பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் வருகையும் குறைவாக இருந்தது. இவர்கள் பழனி அடிவாரம், இடும்பன் கோவில் ஆகிய இடங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டனர். அவர்கள் இன்று(திங்கட்கிழமை) மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
கொடைக்கானல்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் நகரில் ஏரிச்சாலை உள்பட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முக்கிய சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. சுற்றுலா இடங்கள் மூடப்பட்டதன் காரணமாக அவை வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் ஏற்கனவே தங்குவதற்கு அறைகள் முன் பதிவு செய்தவர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.
வத்தலக்குண்டு
வத்தலக்குண்டுவில் ஊரடங்கையொட்டி சுப்பிரமணியசிவா பஸ் நிலையம், மெயின் ரோடு, காளியம்மன் கோவில் பகுதி, கடைவீதி, திண்டுக்கல் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது. பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, கார், பஸ்கள் எதுவும் ஓடவில்லை.



Next Story