கூட்டுறவு சங்க மைதானத்தில் உழவர் சந்தை செயல்படும்
ஊட்டியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க உழவர் சந்தை கடைகள் நாளை முதல் கூட்டுறவு சங்க மைதானத்தில் செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
ஊட்டியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க உழவர் சந்தை கடைகள் நாளை முதல் கூட்டுறவு சங்க மைதானத்தில் செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராசில் செயல்படும் உழவர் சந்தையை நேற்று கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழு ஊரடங்குக்கு முந்தைய 2 நாட்கள் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.
பின்னர் கூட்ட நெரிசலை தவிர்க்க ஊட்டி உழவர் சந்தையில் செயல்படும் கடைகளை என்.சி.எம்.எஸ்.(கூட்டுறவு விற்பனை சங்கம்)வாகன நிறுத்தும் இடத்துக்கு இடமாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு மளிகை, காய்கறி, பூ, இறைச்சி, பழக்கடைகள் எத்தனை உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வது குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்டுப்பாட்டு அறை
கடந்த ஆண்டு ஏ, பி, சி என்ற சுழற்சி முறையில் கடைகள் செயல் பட்டது என்று அதிகாரிகள் விளக்கினர். கொரோனா பரவலை தடுக்க கடைகளை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்துக்கு மாற்றுவது அல்லது கடைகள் விவரங்களை சேகரித்து கூட்டம் கூடாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிப்பதை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருப்பதோடு, நோய் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படுகிறதா என்று கேட்டு உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தற்காலிகமாக இடமாற்றம்
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறும்போது, நீலகிரியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் செயல்படும் 80 கடை கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் என்.சி.எம்.எஸ்.-க்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு அங்கு செயல்படும். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சோபியா, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story