நாகை மாவட்டத்தில் 8,500 கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக 8,500 கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடாததால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக 8,500 கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடாததால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பால், மருந்து விற்பனை நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
பஸ்கள் ஓடவில்லை
மேலும் பஸ்கள், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.. முழு ஊரடங்கால் நாகையின் முக்கிய சாலைகளான நாகை- நாகூர் சாலை, நாகை பெரிய கடைதெரு, நீலா தெற்கு வீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நாகை மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.
தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லையான கீழசன்னாநல்லூர், அருந்தவப்புலம், செங்காதலை, கானூர் ஆகிய இடங்களிலும், மாநில எல்லையான வாஞ்சூர், மானாம்பேட்டை, சேஷமூலை ஆகிய 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு பணி
இந்த சோதனைச் சாவடிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தவிர மாவட்ட எல்லைக்குள் முககவசம் அணியாமல் வருவோர்களுக்கு அபராதம் விதிக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கு காரணமாக நாகை பெரிய கடைதெரு, பாரதி மார்கெட், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், வெளிப்பாளையம் ஆகிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திரூவாரூர், நன்னிலம், பொறையாறு, மயிலாடுதுறை, வேதாரண்யம் ஆகிய 11 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 580 பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் அரசு பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
முழு ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்து 500 விசைப்படகு மற்றும் 3 ஆயிரம் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில், நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. மேலும் கடற்கரைகள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
கலெக்டர் ஆய்வு
நாகூரில் பெரிய கடைத்தெரு, நீயூ பஜார்லைன், கால்மாட்டு தெரு, மெயின்ரோடு உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. .நாகூர் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
வேளாங்கண்ணியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கீழ்வேளூர்-திருமருகல்
கீழ்வேளூரில் கடைவீதி, கச்சனம் சாலை, நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தேவையின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம், வடகரை, கோட்டூர், வவ்வாலடி, திருப்புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்டவை ஓடாததால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.திட்டச்சேரி, திருக்கண்ணபுரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் தாலுகாவில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வாய்மேடு மற்றும் தலைஞாயிறு சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன
Related Tags :
Next Story