ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.73.32 லட்சத்தில் பழங்குடியினர் பூங்கா
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சத்து 32 ஆயிரம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சத்து 32 ஆயிரம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. பஸ் நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், சாலைகள் மற்றும் பல்வேறு பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் வ.உ.சி. கல்லூரி முன்பு ரூ.6 கோடியே 28 லட்சம் மதிப்பில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் 'போக்குவரத்து பூங்கா' அமைக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் குறித்த அம்சங்கள் இடம் பெறுகின்றன. அதன் அருகில் 'கோளரங்கம்' ஒன்று அமைக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தின் 5 திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 'ஐந்திணை பூங்கா' ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியினர் பூங்கா
அதே போன்று ரூ.73 லட்சத்து 32 ஆயிரம் செலவில் இந்தியாவின் பழங்குடியினர் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. இதனை பூம்புகார் நிறுவனம் அமைக்கப்படுகிறது. இதில் இந்தியாவில் உள்ள தோடர், இருளர், பனியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்காக தத்ரூபமான சிலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story