‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Jan 2022 9:44 PM IST (Updated: 9 Jan 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கான்கிரீட் பாலம் அமைத்துதரப்படுமா? 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி திருவிடைமருதூர் ஒன்றியம் பருத்திச்சேரி கிராமத்தில் மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மரப்பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த மரப்பாலம் எப்போது வேண்டுமானாலும் ஆற்றுக்குள் விழுந்து விடும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையிலும் பருத்திச்சேரி கிராமமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வேறுவழியின்றி மரப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுப்பார்களா?
-பருத்திச்சேரிகிராமமக்கள், தஞ்சை.

குடிநீர் வசதி வேண்டும்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் தண்ணீரின்றி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே, வாழ்க்கை வடக்குதெரு பகுதி மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பாபநாசம்.

Next Story