ராசிபுரம் அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி
ராசிபுரம் அருகே டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அய்யப்ப பக்தர் பலியானார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அய்யப்ப பக்தர் பலியானார்.
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் கிங்கேரி பகுதியில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு காரில் அதே பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சதீஷ் (வயது 35), பிரணவ் (38), அருண் (32), லட்சுமிகாந்த் (42), சந்தோஷ்குமார் (34), லோகேஷ் ஆகிய 6 பேர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். காரை லட்சுமிகாந்த் ஓட்டினார். அவர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட்டனர்.
நேற்று காலையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் ஒரு பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விசாரணை
இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த அய்யப்ப பக்தர் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் பலியான சந்தோஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சதீஷ், பிரணவ், அருண், லோகேஷ் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story