கார் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி
கூடலூர் அருகே கார் மோதி டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக இறந்துபோனார்.
கூடலூர்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவன் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 43). இவர், தேனியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக செல்லத்துரை குடும்பத்துடன் கூடலூர் லோயர்கேம்ப் அருகே சுருளியாறு மின்நிலையம் சாலையில் உள்ள தனது மாமனார் காளிமுத்துவின் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்லத்துரை தேனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். வேலை முடிந்து இரவில் அங்கிருந்து லோயர்கேம்ப்பிற்கு பஸ்சில் வந்தார்.
முன்னதாக லோயர்கேம்ப் காலனி பஸ் நிறுத்தத்தில் அவரை அழைத்து செல்வதற்காக காளிமுத்து நின்றிருந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். புதுரோடு பிரிவு அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற கார் ஒன்று, எதிர்பாராத விதமாக செல்லத்துரை மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக காளிமுத்து காயமின்றி தப்பினார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இடுக்கி மாவட்டம் செங்கரையை சேர்ந்த கார் டிரைவர் பாலமுருகனை (40) கைது செய்தனர். விபத்தில் பலியான செல்லத்துரைக்கு ராஜசெல்வி (36) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story