மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன, பஸ்கள் ஓடவில்லை


மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன, பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 9 Jan 2022 10:12 PM IST (Updated: 9 Jan 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடாததால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மயிலாடுதுறை:
முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடாததால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை நகரில் மருந்துக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன. ஒரு சில ஓட்டல்களில் உணவு பார்சல்கள் சேவை மட்டும் வழங்கப்பட்டன. மற்றபடி அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. 
வெறிச்சோடியது
இதனால் நகரில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும் பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, வண்டிக்காரத்தெரு, டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதி உள்ளிட்ட அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் உள்ள காமராஜர் பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் போக்குவரத்து இன்றியும், பயணிகள் நடமாட்டம் இல்லாததாலும் வெறிச்சோடி காணப்பட்டன. 
ஆங்காங்கே முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருவோரை சோதனையிட்டனர். தேவையின்றி சுற்றுபவர்கள் மீதும், முக கவசம் அணியாதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன.
பொறையாறு
முழுஊரடங்கால் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை 300 ஆண்டுகள் பழமையான புதிய எருசலேம் தேவாலயம் ஆகியவை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரை வெறிச்சோடியது. ஒரு சில சிறுவர்கள் கடற்கரையில் விளையாடுவதை காண முடிந்தது. பொறையாறில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையம் வெறிச்சோடியது. தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொறையாறு, செம்பனார்கோவில், பரசலூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது. காரைக்கால் பகுதியில் இருந்து வரும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இதர வாகனங்களில் வரும் பொதுமக்களை பொறையாறு, நல்லாடை ஆகிய பகுதியில் உள்ள நண்டலாறு சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்து முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வோரை மட்டும் அனுமதித்தனர்.
திருவெண்காடு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கொடியம்பாளையம், பழையாறு, திருமுல்லைவாசல், கீழமூவர்கரை, நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம், பூம்புகார் மற்றும் வானகிரி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை, 
இதனால் பூம்புகார் மற்றும் பழையாறு துறைமுகங்களில் பைபர் மற்றும் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சீர்காழி சட்டநாதர்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி கோவில் ஆகிய கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சீர்காழி
சீர்காழி பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி, தென்பாதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள நகைக்கடைகள், உணவக விடுதி, மளிகை கடை, தேனீர் கடை, பெட்டி கடை உள்ளிட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதேபோல் சாலைகளில் வாகனங்கள் செல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. 
இந்தநிலையில் அரசு அனுமதியை மீறி திறக்கப்பட்ட ஒரு சில கடைகளுக்கு நகராட்சி ஆணையர் பட்டுசாமி நேரில் சென்று அபராதம் விதித்து கடையை மூடச் செய்தார். இதேபோல் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
குத்தாலம்
குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 1000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் குத்தாலம் பகுதி, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பால் கடைகள் உள்ளிட்டவை மட்டும் திறந்திருந்தன. ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு சில உணவகங்ளுக்கு மட்டும் பார்சலில் உணவு அளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி குத்தாலம் பேரூர் பகுதியில் குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி திருப்பி அனுப்பினர்.
திருக்கடையூர்
முழுஊரடங்கையொட்டி திருக்கடையூர், ஆக்கூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பால் கடைகள், மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பொறையாறு மற்றும் செம்பனார்கோவில் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மணல்மேடு
இபோல மணல்மேட்டில் நேற்று வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்படாததால் மணல்மேடு கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story