தூத்துக்குடி மாவட்டத்தில்13,800 பேருக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது


தூத்துக்குடி மாவட்டத்தில்13,800 பேருக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது
x
தினத்தந்தி 9 Jan 2022 4:56 PM GMT (Updated: 9 Jan 2022 4:56 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 800 பேருக்கு இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 800 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதில் முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
13,800 பேர்
அதன்படி 39 வாரங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகுதியானவர்கள், 
தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 7 ஆயிரத்து 600 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 6 ஆயிரத்து 200 பேரும் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

Next Story